
அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான பயணியர் விமானம் ஒன்று, தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்திய நேரப்படி இன்று (ஜன.30) காலை 7.30 மணி அளவில் தரையிறங்க முயன்றது.
அப்போது அங்கே பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் யுஹெச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது எதிர்பாராவிதமாக நடுவானில் மோதியது பயணியர் விமானம்.
தரையில் இருந்து சுமார் 400 அடி உயரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் தீப்பிடித்த நிலையில் அருகிலிருந்த போடோமாக் ஆற்றில் விழுந்தது விமானம். அத்துடன் விபத்திற்குப் பிறகு ராணுவ ஹெலிகாப்டரின் எஞ்சியிருந்த பாகங்கள் போடோமாக் ஆற்றுக்கு அருகே இருந்த பகுதியில் விழுந்தன.
இந்த விபத்து நடைபெற்றபோது, விமானத்திற்குள் 60 பயணிகளுடன் 4 ஊழியர்களும், ஹெலிகாப்டருக்குள் 3 ராணுவ வீரர்களும் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து, ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர், வாஷிங்டன் டி.சி. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கினார்கள். ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.