
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்கள் அனைத்துக்கும் 100% வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே வரி விதிப்புகளை அறிவித்து அடுத்தடுத்து அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறார் டொனால்ட் டிரம்ப். தற்போதைய அறிவிப்பு திரைத் துறையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தனது சமூக ஊடகப் பக்கங்களில் இதுபற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது:
"குழந்தையிடமிருந்து மிட்டாயைத் திருடுவதுபோல மற்ற நாடுகளால் அமெரிக்காவிடமிருந்து திரைத் துறை தொழில் திருடப்பட்டுள்ளது. மிகக் குறிப்பாக காலிஃபோர்னியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தீராத இப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில், அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்கள் அனைத்துக்கும் 100% வரி விதிக்கப்படுகிறது" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது, ஏதேனும் படங்களுக்கு விலக்கு உள்ளனவா என இந்த அறிவிப்பின் விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. டிரம்பின் இந்த அறிவிப்பு இந்திய திரைத் துறையையும் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஆர்ஆர், பாகுபலி, பதான் போன்ற படங்கள் கடந்த காலங்களில் அமெரிக்கச் சந்தையில் நல்ல வரவேற்பைச் சம்பாதித்தன.
மருந்துகள் முதல் கனரக லாரிகள் வரை வரிசையாக வரி விதிப்புகளை அறிவித்து வருகிறார் டிரம்ப். மருந்துகளுக்கு உச்சபட்சமாக 100% வரி விதிக்கப்படும் என முன்பு அறிவித்தார். அதேசமயம் அமெரிக்காவில் மருத்து தயாரிப்பதற்கான உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார். கனரக லாரிகளுக்கு 25% வரி விதித்தார். சமையலறை, குளியலறைக்குத் தேவையான பொருள்களுக்கு 50% வரி விதித்தார்.
Donald Trump | Movies | Films | Film Industry | Tariff |