இலங்கை அரசியல்வாதியும், அந்நாட்டு முன்னோடி தமிழ் தலைவர்களில் ஒருவருமான இரா. சம்பந்தன் நேற்று இரவு வயது மூப்பின் காரணமாக கொழும்பில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார்.
91 வயதான சம்பந்தன், 2004 முதல் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். 2015 முதல் 2018 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் சம்பந்தன். அமிர்தலிங்கத்துக்குப் பிறகு இலங்கை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த இரண்டாவது தமிழர் சம்பந்தன்.
இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினராக இருக்கும் சம்பந்தன். தற்போது கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து எம்.பி.யாக உள்ளார். வயது மூப்பின் காரணமாக தற்போதைய நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் நீண்ட காலமாக சம்பந்தன் பங்கேற்கவில்லை.
வழக்கறிஞரான சம்பந்தன், அரை நூற்றாண்டு காலமாக இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். 2009-ல் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழர்களுக்கு சம உரிமை கேட்டுக் குரல் எழுப்பி வந்தார்.
`இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் தலைவர் சம்பந்தன் இறந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமின்றி அமைத்து தரப்பினரின் மரியாதையைப் பெற்றவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரை தமிழ்மக்களின் நலனுக்காகவே சம்பந்தன் சிந்தித்தார், செயல்பட்டார்’ என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சம்பந்தனுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியும் சம்பந்தனுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.