
உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் குறித்து, பிரபல கடவுச்சொல் சேமிப்பு நிறுவனமான நார்ட்பாஸ் நடத்திய ஆய்வில் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அதிகமாக பயன்படுத்தப்படும் முதல் 200 கடவுச்சொற்கள் குறித்த 6-வது வருடாந்திர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது, பிரபல கடவுச்சொல் சேமிப்பு நிறுவனமான நார்ட்பாஸ். 44 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள கடவுச்சொற்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது நார்ட் பாஸ்.
இதன்படி உலகளவிலும், இந்தியாவிலும் அதிக பயன்பாட்டில் உள்ள கடவுச்சொல் `123456’. உலகளவில் இந்த கடவுச்சொல்லை சுமார் 30,18,050 நபர்கள் உபயோகிக்கின்றனர். அதேநேரம் இந்தியாவில் சுமார் 76,981 நபர்கள் இந்த கடவுச்சொல்லை உபயோகிக்கின்றனர். உலகளவில் அதிக பயன்பாட்டில் உள்ள 2-வது கடவுச்சொல் `123456789’. இந்திய அளவில் அதிக பயன்பாட்டில் உள்ள கடவுச்சொற்களில் இது 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் `பாஸ்வேர்ட்’ (password) என்பது இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளிலும் கூட அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லாக இது உள்ளது. அதேநேரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 40 சதவீத கடவுச்சொற்கள் பொதுவானதாக உள்ளதாகவும், அதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது சுலபமாக சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் நார்ட்பாஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களில் சுமார் 78 சதவீத கடவுச்சொற்களை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம் எனவும் நார்ட்பாஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொல்லை உருவாக்க சொற்கள், எழுத்துகள், சிறப்பு குறியீடுகள் என கலவையாக குறைந்தபட்சம் 20 எழுத்துகள் நீளம் உள்ள கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.