
கணிதம் தொடர்புடைய சாதாரண கேள்விக்கு வாட்ஸ்ஆப் மெடா ஏஐ தவறான பதிலைத் தந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு அம்சத்தை உருவாக்கி வருகின்றன. அண்மையில், வாட்ஸ்ஆப், பேஸ்புக், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டகிராமில் மெடா ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் (AI Chat Bot) அறிமுகப்படுத்தப்பட்டது. வாட்ஸ்ஆப்பில் மெடா ஏஐ-யிடம் உரையாடினால் பதில்கள் மற்றும் தகவல்களை நம்மிடம் பகிர்கிறது.
ஓர் உரையாடலில் கணிதம் குறித்த சாதாரண கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு மெடா ஏஐ தவறான பதிலை அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. கணிதத்தில் 9.9 மற்றும் 9.11, இதில் எது பெரிய எண் என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு 9.11 தான் பெரிய எண் என மெடா ஏஐ பதிலளித்துள்ளது. ஏன் 9.11 பெரிய எண் என்று அடுத்ததாக ஒரு கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு 9-ஐவிட 11 தான் பெரியது என மெடா ஏஐ பதிலளித்துள்ளது. இரண்டிலும் 9 என்ற எண் இருப்பதால், தசம புள்ளிக்குப் பிறகு இருக்கும் எண்களை ஒப்பிடுகையில் 9-ஐவிட 11 தான் பெரியது என்பதால், 9.9-ஐவிட 9.11 தான் பெரியது என்கிற முடிவுக்கு மெடா ஏஐ வந்துள்ளது.
உடனடியாக, 9.9 என்றால், கணிதத்தில் இதன் புரிதல் 9.90 என்றுதானே அர்த்தம். அப்படி இருக்கும்போது 9.11-ஐவிட 9.9 தான் பெரியது என்று பதில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு, தாங்கள் சொல்வதுதான் சரி, என்னுடையத் தவறுக்கு மன்னிக்கவும் என பதிலளிக்கிறது மெடா ஏஐ. மேலும், தவறை சுட்டிக்காட்டியதற்கு மெடா ஏஐ பாராட்டையும் தெரிவிக்கிறது. தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்வதாகக் கூறி 9.11-ஐவிட 9.9 தான் பெரியது என்கிற முடிவை நமக்கு மாற்றி அளிக்கிறது.
இப்படி இருக்கும்போது மெடா ஏஐ மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என்று தொடர்ச்சியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, தான் முற்றிலும் சரியானது அல்ல என்றும் தானும் தவறைச் செய்யக்கூடும் என்றும் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் மெடா ஏஐ விளக்கமளித்துள்ளது.
மேலே சொன்னதைப்போல என்னுடையத் தவறை சுட்டிக்காட்டினால், இதிலிருந்து நிச்சயம் நான் பாடம் கற்றுக்கொண்டு தவறை சரிசெய்வேன் என்றும் மெடா ஏஐ கூறுகிறது. தான் ஒரு கருவி மட்டுமே என்பதால், தன்னுடைய பதில்களை மனிதர்களுக்கு நிகரான துல்லியமான நுண்ணறிவாகக் கருதக் கூடாது என்றும் மெடா ஏஐ சாட்பாட் எச்சரித்துள்ளது.