
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2026-ம் நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிரித்திவாசன் ஞாயிறன்று மனிகன்ட்ரோல் ஊடகத்துக்குப் பேட்டியளித்தார்.
"நாங்கள் குறிப்பாக ஏஐ உள்பட புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருகிறோம். வேலை செய்யும் வழிமுறைகள் மாறி வருகின்றன. எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப தயாராகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். உலகளவில் மொத்தமுள்ள ஊழியர்களில் 2 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட நேரிடும்" என்று கூறியுள்ளார்.
ஜூனில் நிறைவடைந்த காலாண்டின்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்தம் 6,13,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 2 சதவீதம் என்று கணக்கிட்டால், ஏறத்தாழ 12,200 ஊழியர்கள். எனவே, 12,200 ஊழியர்களைப் பணிக்க நீக்க செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.
"இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தலைமைச் செயல் அலுவலராக நான் எடுத்த முடிவுகளில் மிகக் கடினமான முடிவு" என கிரித்திவாசன் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு ஏஐ காரணமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். ஏஐ காரணம் அல்ல. எதிர்காலத்துக்குத் தேவையான திறன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவு என அவர் கூறியிருக்கிறார்.
ஏஐ வருகையால், ஊழியர்கள் பலர் பணிநீக்கத்தைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் ஒரு பக்கம் நிலவி வரும் வேளையில், டிசிஎஸ் இதுமாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது.
TCS | Tata Consultancy Services | Job Cut | AI |