
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணனை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு.
கடந்த 2022 ஜனவரி 15-ல் இஸ்ரோவின் 10-வது தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் எஸ். சோம்நாத். இவரது பதவிக்காலத்தில் சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. 3 வருடப் பணிக்குப் பிறகு இம்மாதம் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் சோம்நாத்.
இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவரை நியமிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, தலைநகர் தில்லியில் நேற்று கூடியது.
இந்த அமைச்சரவைக் குழு கூட்டத்தில், கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் `திரவ உந்துவியல் மையத்தின்’ இயக்குநராக உள்ள வி. நாராயணனை, வரும் ஜன.14 தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராகவும், இந்திய விண்வெளித்துறை இயக்குநராகவும் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி, மேலக்காட்டுவிளையைச் சேர்ந்த வி. நாராயணன் 1984-ல் இஸ்ரோ பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் பல்வேறு பொறுப்புகளில் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ள நாராயணன், ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
சந்திரயான் 2, 3, ஆதித்யா எல்-1 (சூரிய ஆய்வு), ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் போன்ற இஸ்ரோவின் முக்கியத் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் நாராயணன். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டதை ஒட்டி நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோ பணியில் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
நாராயணனின் தலைமையில் உறுதியாக இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! அவரது பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்’ என்றார்.