

சாட்ஜிபிடி கோ சேவையை ஓராண்டுக்குக் கட்டணம் இல்லாமல் வழங்குவதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓபன் ஏஐ -யின் சாட்ஜிபிடியைப் பயன்படுத்த இந்தியாவில் நான்கு வகையான திட்டங்கள் உள்ளன. சாட்ஜிபிடி ஃப்ரீ, சாட்ஜிபிடி கோ, சாட்ஜிபிடி பிளஸ் மற்றும் சாட்ஜிபிடி ப்ரோ.
இதில் சாட்ஜிபிடி ஃப்ரீ சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை. குறிப்பிட்ட அளவிலான சேவைகளை மட்டுமே இதன்மூலம் பெற முடியும். சாட்ஜிபிடி கோ சேவையை பெற மாதம் ரூ. 399 கட்டணம் செலுத்த வேண்டும். சாட்ஜிபிடி ஃப்ரீ மூலம் கிடைக்கும் சேவையைவிட கூடுதல் சேவைகள் இதில் கிடைக்கும். இந்தத் திட்டம் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாட்ஜிபிடி பிளஸ் சேவையை பெற மாதம் ரூ. 1,999 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் மற்ற இரண்டைவிட கூடுதல் அம்சங்கள் சேவையாகக் கிடைக்கப்பெறும். சாட்ஜிபிடி ப்ரோ சேவையை பெற மாதம் ரூ. 19,900 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதுதான் உச்சபட்ச திட்டமாக உள்ளது. பிறகு பிஸ்னஸ் மற்றும் என்டர்பிரைஸ் என இரு வேறு திட்டங்கள் தனியாக உள்ளன.
தற்போது சாட்ஜிபிடி கோ திட்டத்தை இந்தியாவில் ஓராண்டுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்து ஓபன்ஏஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 4 அன்று பெங்களூருவில் ஓபன்ஏஐ-யின் தேவ்டே எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக நவம்பர் 4 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
அதாவது, நவம்பர் 4-க்குப் பிறகு சாட்ஜிபிடியில் புதிதாக யார் சைன் அப் (Sign-Up) செய்கிறார்களோ, அவர்களுக்கு சாட்ஜிபிடி கோ சேவைகள் ஓராண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. எனவே, சாட்ஜிபிடி கோ சேவையை ஓராண்டுக்கு இலவசமாகப் பெற நவம்பர் 4-க்குப் பிறகு சாட்ஜிபிடியில் புதிதாக சைன் அப் செய்ய வேண்டும்.
ஏஐ போட்டியில் இந்தியா என்பது ஓபன்ஏஐ நிறுவனத்துக்கு இரண்டாவது பெரிய சந்தையாக இருப்பதாகக் கருதப்படுகிறது. பெர்பிளெக்ஸிட்டி தனது பிரீமியம் சேவையை ஏர்டெல் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இதற்காக பெர்பிளெக்ஸிட்டி, ஏர்டெல் இடையே ஒப்பந்தம் உள்ளது. கூகுள் தனது ஏஐ ப்ரோ திட்டத்தை மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 19,500 அமெரிக்க டாலர்.
இந்த நிலையில், சாட்ஜிபிடி கோ திட்டத்தை இலவசமாக வழங்குவது குறித்த அறிவிப்பை ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
As part of its growing focus on the Indian market, OpenAI, announced on Tuesday that ChatGPT Go will now be available free of cost to users in India.
ChatGPT | OpenAI | ChatGPT GO |