
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் நேற்று (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த நிகழ்வை உள்ளூர் அதிகாரிகள் முதலில் உறுதிப்படுத்திய நிலையில், அது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் வைத்து, விரைவில் சோதனை அடிப்படையில் இயக்கப்படவிருந்த `ஷிப் 36’ என்று அழைக்கப்படும் ராக்கெட்டில் நேற்று (ஜூன் 18) வழக்கமான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதி திடீரென வெடித்துச் சிதறியதால், சுற்றியிருந்த பகுதி தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வெளியிடப்பட்ட அந்நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவில்,
`ஜூன் 18 புதன்கிழமை இரவு 11 மணியளவில், பத்தாவது பறக்கும் சோதனைக்குத் தயாராகிய ஸ்டார்ஷிப், ஸ்டார்பேஸில் ஒரு சோதனை நிலையத்தில் இருந்தபோது ஒழுங்கின்மையை (வெடித்துச் சிதறல்) சந்தித்தது. அங்கிருந்த அனைத்துப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
சோதனை தளத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் பாதுகாக்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எங்கள் ஸ்டார்பேஸ் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. (சோதனை தளத்தை) சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, நடப்பாண்டின் தொடக்கத்தில், இரண்டு ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறிய நிலையில், தற்போது சோதனை நிலையத்திலேயே ராக்கெட் மூன்றாவது முறையாக வெடித்துச் சிதறியுள்ளது.