
பிஎஸ்எல்வி ராக்கேட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்), விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பும் திட்டம் (ககன்யான்), சந்திரயான்-4 என விண்வெளித்துறையில் செயல்படுத்தவுள்ள பல்வேறு வருங்காலத் திட்டங்களுக்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.
இந்நிலையில், இந்த வருங்காலத் திட்டங்களுக்கு உதவிடும் வகையில் ஆனந்த் டெக்னாலஜிஸ் என்கிற தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருங்கிணைத்த தலா 220 கிலோ எடை கொண்ட, ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி இரட்டை செயற்கைக் கோள்களை சமீபத்தில் இஸ்ரோவிடம் வழங்கியது.
ஸ்பேஸ் டாக்கிங் சிஸ்டத்தைச் சோதனை செய்வதற்காக இந்த இரட்டை ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள்களை வடிவமைத்திருந்தது இஸ்ரோ. இந்நிலையில், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் உதவியுடன் நேற்று (டிச.30) இரவு 10 மணி அளவில் ஆந்திரத்தின் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதள மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டன ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள்.
விண்ணில் செலுத்தப்பட்ட சுமார் 15 நிமிடத்தில், தரையில் இருந்து 476 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில், ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. தற்போது ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவரும் இந்த இரட்டை விண்கலன்கள் அடுத்த 2 வாரங்களில் ஒன்றிணைக்கப்பட்டு, இணைந்து செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.