யுபிஐ பரிவர்த்தனைகளை வேகப்படுத்தும் புதிய விதிமுறைகள் அமல்!

அனைத்து யுபிஐ செயலிகளும், வங்கிகளும் வரும் ஜூன் 30-க்குள் இந்த விதிமுறைகளை செயல்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளை வேகப்படுத்தும் புதிய விதிமுறைகள் அமல்!
1 min read

நேற்று (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்த தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) புதிய விதிமுறைகள் மூலம், இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் இனி மேலும் விரைவாக நடைபெறவுள்ளன.

முன்னதாக, யுபிஐ மூலம் பணம் அனுப்பவும், பணம் பெறவும் 30 வினாடிகள் வரை நேரம் எடுத்துக்கொண்ட நிலையில், புதிய விதிமுறைகள் மூலம் இந்த நேரம் 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. பணம் பெறுபவரின் யுபிஐ முகவரியைச் (UPI ID) சரிபார்க்கும் நேரமும், 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் மூலம், யுபிஐ பயனர்களின் பொதுவான கவலையாக இருக்கும் தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் (failed transactions) தொடர்பான சந்தேகங்களும் இனி விரைவில் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடையும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளதா அல்லது மீண்டும் வங்கி கணக்கிற்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க இனி 30 வினாடிகள் வரை காத்திருக்க தேவையில்லை. 10 வினாடிகளுக்குள் அது தொடர்பான முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

நெட்வொர்க் சிக்கல்கள் காரணமாக ஒரு பரிவர்த்தனை யுபிஐ அமைப்பை சென்றடையவில்லை என்றால், இனி அது தோல்வியடைந்த பரிவர்த்தனையாக தானாகவே குறிக்கப்பட்டுவிடும்.

இருப்பு சரிபார்க்க வரம்பு

மற்றொரு முக்கிய மாற்றமாக, பயனர்கள் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் வங்கி கணக்கு இருப்பை யுபிஐ செயலி வழியாக சரிபார்க்கலாம்.

முன்பு, இத்தகைய வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை. நெட்வொர்க் மீதான சுமையைக் குறைப்பதற்கும், செயலி அமைப்புகள் சீராக இயங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

யுபிஐ செயலியில் உண்மையான பெயர் மட்டுமே

பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், பிழைகளைக் குறைக்கவும், யுபிஐ பரிவர்த்தனையின்போது பயனாளியின் உண்மையான பெயரை மட்டுமே காட்டவேண்டும் என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் உத்தரவிட்டுள்ளது.

மோசடிகளைத் தடுக்கவும், மின்னணு பரிவர்த்தனைகளில் நம்பிக்கையை வளர்க்கவும் இத்தகைய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும்

யுபிஐ செயல்பாட்டை மேம்படுத்தும் வகையிலான இந்த புதிய விதிமுறைகள் ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் மற்றும் பிற பிரபலமான யுபிஐ செயலிகளுக்குப் பொருந்தும் என்றும், அனைத்து யுபிஐ செயலிகளும், வங்கிகளும் வரும் ஜூன் 30-க்குள் இந்த விதிமுறைகளை செயல்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in