அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவிவரும் மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் வகையான XEC-யால் மீண்டும் உலகளவில் கோவிட் தொற்றின் பாதிப்பு அதிகரிக்கக்கூடுமா என்ற கேள்வு எழுந்துள்ளது.
இந்தப் புதிய மாறுபட்ட XEC வகை கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதத்தில் முதல்முறையாக ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. இதை அடுத்து படிப்படியாக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, உக்ரைன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த வைரஸின் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை.
இந்த மாறுபட்ட XEC வகை கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இது முந்தைய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றிலிருந்து உருவாகியிருக்கக்கூடும் என்று தகவலளித்துள்ளனர். மேலும் இந்தப் புதிய XEC வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் மிக வேகமாகப் பரவும் தன்மைகொண்டதாக அறியப்படுகிறது.
தற்போது பரவலில் இருக்கும் கொரோனா வைரஸ் வகைகளில் இந்த XEC வகையானது, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிகளவில் பரவி உலகளவில் ஆதிக்கமான கோவிட் வைரஸ் வகையாக அறியப்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். தற்போது ஐரோப்பாவில் இந்த XEC வகையால் பாதிக்கப்படும் பொதுமக்களின் உடல்நிலை சில வாரங்களில் முன்னேற்றமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும் தடுப்பூசிகளால் இந்த XEC வகை கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க முடியும் எனவும், அதனால் தடுப்பூசிகளையும், பூஸ்டர் டோஸ்களையும் பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவிட் பெருந்தொற்று அலையால் பொதுமுடக்கம் ஏற்பட்டதைப் போல இந்த XEC வகை கொரோனா வைரஸ் பரவலால் மீண்டும் அவ்வாறு ஏற்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் உறுதியாகக் கூறமுடியாத நிலை உள்ளது.