
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றத்தைக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் ஏற்றுமதி, உற்பத்தியில் தன்னிறைவு, நவீனமயமாக்கல், போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014-ல் முதல் முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக கடந்தாண்டு ஜூன் 9-ல் பிரதமராக மோடி பதவியேற்றார்.
பிரதமர் பதவியில் 11 ஆண்டுகளை மோடி நிறைவு செய்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது, பாதுகாப்பு சார்ந்த இந்தியாவின் உற்பத்தி 174% அதிகரித்து, 2023-24-ம் ஆண்டில் ரூ. 1.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு உள்நாட்டிலேயே வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி மீது மத்திய அரசு கவனம் செலுத்தியதே காரணம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த இந்தியாவின் ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்து, 2024-25-ம் ஆண்டில் ரூ. 23,622 கோடியை எட்டியுள்ளது. தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், அர்மீனியா உள்பட 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பிரத்யேக பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை ரூ. 8,658 கோடிக்கு மேலான மதிப்பீட்டில் முதலீடுகளை ஈர்த்துள்ளன, மேலும் ரூ. 53,439 கோடி முதலீட்டு மதிப்பிலான 253 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.