புதிய செமிக்ரையோஜெனிக் எஞ்சின் சோதனை: வெற்றிகரமாக மேற்கொண்ட இஸ்ரோ!

LVM3 ராக்கெட்டில் தற்போது பயன்படுத்தப்படும் திரவ மைய நிலைக்கு மாற்றாகவும், அதன் சுமை திறனை மேம்படுத்துவதற்காகவும் செமிக்ரையோஜெனிக் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
செமிக்ரையோஜெனிக் எஞ்சின் சோதனை - கோப்புப்படம்
செமிக்ரையோஜெனிக் எஞ்சின் சோதனை - கோப்புப்படம்ANI
1 min read

செமிக்ரையோஜெனிக் எஞ்சினின் 3வது வெப்ப சோதனையை திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள ஐபிஆர்சி மையத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செமிக்ரையோஜெனிக் எஞ்சினின் இயக்கத்தையும், அதை தொடங்குவதற்கான செயல்முறைகளையும் சரிபார்க்கும் வகையிலும், எஞ்சினின் ஒருங்கிணைந்த செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் கடந்த மே 28 அன்று இந்த பரிசோதனை நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மூன்று வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தின்போது எஞ்சின் ​​வெற்றிகரமாக இயக்கப்பட்டு, அதன் மதிப்பிடப்பட்ட சக்தி அளவில் 60% வரை இயங்கியுள்ளது. மேலும், இந்த சோதனை ஓட்டத்தில் நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்திறனை அது வெளிப்படுத்தியது.

LVM3 ரக ராக்கெட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் திரவ மைய நிலைக்கு (liquid core stage) மாற்றாகவும், அதன் சுமை திறனை மேம்படுத்துவதற்காகவும், 2000 kN-வகுப்பு SE2000 எஞ்சின் மூலம் இயக்கப்படும் செமிகிரையோஜெனிக் உந்துவிசை நிலையை இஸ்ரோ புதிதாக உருவாக்கியுள்ளது.

செமிக்ரையோஜெனிக் எஞ்சினின் செயல்திறனை மதிப்பிடும் பணிகளை கடந்த மார்ச் மாதத்தில் முதல்முறையாக இஸ்ரோ தொடங்கியது. குறைந்த மற்றும் உயர் அழுத்த டர்போ-பம்புகள், ஸ்டார்ட்-அப் அமைப்பு, பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகள் போன்ற எஞ்சினின் முக்கியமான கூறுகள் தொடர்பாக அப்போது நடைபெற்ற சோதனையில் கவனம் செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in