
இஸ்ரோ-நாசா கூட்டுத் தயாரிப்பில் உருவான, பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கும் நிசார் செயற்கைக்கோள், இன்று (ஜூலை 30) மாலை 5.41 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA - ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை தயாரிக்க முடிவு செய்து கடந்த 2014-ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இரு நாட்டு விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமார் ரூ. 12,000 கோடி மதிப்பீட்டில் கடந்தாண்டு நிசார் செயற்கைக்கோள் தயாரானது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று (ஜூலை 30) மாலை 5.41 மணி அளவில் ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள இஸ்ரோவுக்குச் சொந்தமான 2-வது ஏவுதளத்தில் இருந்து, நிசார் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக தயாரிக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளின் எடை 2,392 கிலோவாகும். 5 ஆண்டுகள் வரை செயல்படவுள்ள நிசாரிடம் இருந்து, புவியின் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தரவுகள் மற்றும் அதிநவீன புகைப்படங்களைப் பெற முடியும்.
12 நாள்களுக்கு ஒருமுறை இந்த செயற்கைக்கோள் பூமியை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும்.