
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள மையத்திலிருந்து 100-வது ராக்கெட்டை விண்ணில் ஏவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.
அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷ்யாவின் குளோனஸ் ஆகியவற்றைப் போல இந்தியாவுக்கான பிரத்யேகமான தடங்காட்டி நேவிக் என்று அழைக்கப்படுகிறது. நேவிக் தடங்காட்டி தொடர்ந்து சேவை வழங்கும், 8 செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்பட்டு வருகின்றன. இவை ஐஆர்என்எஸ்எஸ். செயற்கைக்கோள்கள் என்று கூட்டாக அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2016-ல் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக, அதிநவீன என்விஎஸ்-02 செயற்கைக்கோளை வடிவமைத்தது இஸ்ரோ. 2,250 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள் சுமார் 10 ஆண்டுகாலம் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜன.29) காலை சரியாக 6.23 மணி அளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் 2-வது ராக்கெட் ஏவுதள மையத்திலிருந்து என்விஎஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணை நோக்கிப் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட். இது இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட நூறாவது ராக்கெட்டாகும்.
19 நிமிடங்கள் கழித்து, பூமியில் இருந்து 322.93 கீ.மி. உயரத்தில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.
இது தொடர்பாக சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், `100-வது ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவி, இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 6 தலைமுறை ராக்கெட்டுகளை ஏவி, 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 548 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது இஸ்ரோ’ என்றார்.