பூமியை நெருங்கும் விண்கல்: தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ

இந்த விண்கல் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பல் விக்ரமாதித்யா மற்றும் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம் ஆகியவற்றைவிட அளவில் பெரியதாகும்
பூமியை நெருங்கும் விண்கல்: தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ
1 min read

பூமியை நெருங்கி வரும் அபோபிஸ் விண்கலின் பயணத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. வரும் 13 ஏப்ரல் 2029-ல் பூமிக்கு மிக அருகில் அபோபிஸ் விண்கலின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

2004-ல் அபோபிஸ் விண்கல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பயணம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு எப்போது அந்த விண்கல் பூமிக்கு மிக அருகே பயணிக்கக்கூடும் என்பது கணிக்கப்பட்டது. இதன்படி 2029-ல் அபோபிஸ் விண்கல் முதல்முறையாக பூமியை நெருங்கும் என்றும், பிறகு 2036-ல் மீண்டும் ஒரு முறை பூமியை நெருக்கும் என்று கூறப்படுகிறது.

2029-ல் அபோபிஸ் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டது. ஆய்வுகளின் முடிவில் பூமியைத் தாக்காமல் அபோபிஸ் விண்கல் வெறுமனே கடந்து செல்லும் என்பது கண்டறியப்பட்டது. ஆனால் அபோபிஸ் அளவுக்கு நெருக்கமாக இதுவரை வேறு எந்த ஒரு விண்கலும் பூமிக்கு அருகே பயணித்தது கிடையாது என்று கூறப்படுகிறது.

`பெரிய விண்கல் தாக்குதல் மனித குலத்துக்கு ஆபத்தாகும். விண்வெளியில் உள்ள விண்கல் போன்றவற்றை கண்காணிக்கும் எங்களது நேத்ரா பிரிவு அபோபிஸைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது போன்ற விவகாரங்களில் இப்போதும் வருங்காலத்திலும் பிற நாடுகளுடன் இந்தியா தகுந்த ஒத்துழைப்பை மேற்கொள்ளும்’ என்று என்டிடிவிக்குப் பேட்டியளித்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

அபோபிஸ் விண்கலின் சுற்றளவு 340 – 450 மீட்டர் என்று கூறப்படுகிறது. இந்த விண்கல் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பல் விக்ரமாதித்யா மற்றும் குஜராத் மாநிலம் அஹமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானம் ஆகியவற்றைவிட அளவில் பெரியதாகும்.

140 மீட்டருக்கும் அதிகமான சுற்றளவைக் கொண்ட விண்கல் பூமியைக் கடந்து செல்வது ஆபத்தான நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 300 மீட்டருக்கும் அதிகமான சுற்றளவைக் கொண்ட விண்கல் பூமியைத் தாக்கினால் மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்படும் என்று கணித்துள்ளது இஸ்ரோ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in