
ஸ்ரீஹரிகோட்டாவில் அமையவிருக்கும் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் குறித்தும், கடலில் தரையிறங்கும் புதிய ரக ராக்கெட்டுகள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் அமைந்துள்ளன. இதில் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால் இதில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராட்கெட்டுகளை ஏவ முடியாது.
ஸ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது ஜி.எஸ்.எல்.வி. (மார்க் 3) ரக ராக்கெட்டுகள் இதிலிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமும் அங்கிருந்துதான் முதலில் செயல்படுத்தப்படவேண்டும்.
ஆனால் எதிர்பாராவிதமாக 2-வது ஏவுதளத்தில் ராக்கெட் வெடித்துச் சிதறினால், அதனால் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியாத சூழல் ஏற்படும். எனவே ஜி.எஸ்.எல்.வி. மற்றும் என்.ஜி.எல்.வி. (புதிய ரக ராக்கெட்டுகள்) ராக்கெட்டுகளை ஏவும் வசதியுடன் 3-வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
புதிதாக தயாரிக்கப்படும் என்.ஜி.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவிய பிறகு மீண்டும் அவற்றை மீட்டு உபயோகிக்க முடியும். இந்த வகை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் நிலத்தில் தரையிறங்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பிறகு கடலில் தரையிறங்கும் வகையில் சோதனை செய்யப்படும்’ என்றார்.