விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, அது குறித்து விளக்கம் அளித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் 8 நாட்கள் பயண திட்டமாக கடந்த ஜூன் 5-ல் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தை உபயோகித்து சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் இன்று வரை அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான சுனிதா வில்லியம்ஸின் புகைப்படங்களில், அவர் உடல் மெலிந்து, பலவீனமாக காணப்படுகிறார். இதை அடுத்து சுமார் 5 மாதங்களைத் தாண்டி விண்வெளியில் தங்கியுள்ளதால் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டன.
இதை அடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள நாசாவைச் சேர்ந்த ஜிம் ரசல், `சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அவர்கள் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அனைவரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர்’ என்றார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் தேதி குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.