
அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திற்குள் இருந்த ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அவசரகால வெளியேறும் கதவு வழியாக வெளியேறி உயிர் தப்பித்த அந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் அமர்ந்திருந்த 11ஏ இருக்கையின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் பொதுவெளியில் கிளம்பியுள்ளன.
அவசரகால வெளியேறும் கதவிற்கு அருகில் அமர்ந்திருப்பது விபத்தில் இருந்து தப்பிக்க உதவும், ஆனால் அது எப்போதுமே 11ஏ ஆக இருக்காது. ஏனென்றால் பல்வேறு விதங்களிலும் விமான வடிவமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
விமானத்திற்கு விமானம் இருக்கை அமைப்புகள் பரவலாக வேறுபடுவதாலும், ஒவ்வொரு விபத்துகளும் தனித்துவமானவை என்பதாலும், இத்தகைய விபத்துகளில் உயிர் பிழைத்திருப்பது பெரும்பாலும் சிக்கலான காரணிகளை சார்ந்திருப்பதாலும், இதை அவ்வளவு துல்லியமாக கூற முடியாது என்று விமான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
`இந்த குறிப்பிட்ட நிகழ்வில், அவசரகால வெளியேறும் கதவுக்கு அருகில் (சம்மந்தப்பட்ட) பயணி அமர்ந்திருந்ததால், இதுவே அன்றைய நாளில் மிகவும் பாதுகாப்பான இருக்கையாக இருந்துள்ளது’ என்று சிட்னியைச் சேர்ந்த தனியார் விமான ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் ரான் பார்ட்ச் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், `ரமேஷை போல அவசரகால வெளியேறும் கதவிற்கு அருகே அமர்ந்திருப்பது, விமானத்திலிருந்து முதலில் வெளியேறுபவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது, இருப்பினும் சில அவசரகால வெளியேறும் வழிகள் விபத்துக்குப் பிறகு செயல்படாமல்போக வாய்ப்புள்ளது. விமானம் மோதிய கட்டடத்தின் சுவரால் விமானத்தின் எதிர் பக்கம் தடுக்கப்பட்டிருந்தது’ என்றார்.
1971 முதல் நடைபெற்ற விமான விபத்துகள் குறித்து 2007-ல் பாப்புலர் மெக்கானிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், விமானங்களின் பின்புறம் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில நிபுணர்கள் விமானத்தின் இறக்கை பகுதி பிழைப்பதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறுகின்றனர்.