
நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையில், கடந்த 4 தசாப்தங்களாக அண்டார்டிகா கண்டம் மிக வேகமாக பசுமைக்குள்ளாகி வருவதாகவும், இதனால் அதன் தாவரவியல் பரப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 7 கண்டங்களில் ஒன்றான அண்டார்டிகா, பனி மற்றும் பனிப்பாறைகள் சூழ்ந்திருக்கும் ஒரு பகுதியாகும். 1986-ல் அண்டார்டிகாவில் இருக்கும் தாவரங்களின் பரப்பளவு ஒரு சதுர கி.மீ.க்கும் குறைவாக இருந்தது. ஆனால் 2021-ல் தாவரங்களின் பரப்பளவு அதிலும் பெரும்பாலும் பாசி, கிட்டத்தட்ட 12 சதுர கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. அதாவது 35 ஆண்டுகளில் 14 மடங்கு அண்டார்டிகாவின் பசுமை அதிகரித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன.
மேலும் இந்த ஆய்வுக் கட்டுரைக்காகக் கருத்தில்கொள்ளப்பட்ட ஆய்வுக்காலமான 40 வருடங்களை ஒப்பிடும்போது, கடந்த 5 வருடங்களில் மட்டும் அண்டார்டிகாவின் பசுமைப்படுதல் 33 சதவீதம் வேகமாக இருந்ததாக, இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அண்டார்டிகாவின் பசுமை பரப்பு அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படுகிறது. புவி வெப்பமடைதலால் அண்டார்டிகாவில் முன்பு பனிப்பாறைகளாக இருந்த பகுதிகள் உருகிய பிறகு, அங்கே தாவரங்கள் உருவாகின்றன. அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகினால், அதனால் பூமியின் கடல்மட்டம் உயரும். கடல்மட்டம் உயருவதால் பல கண்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நேச்சர் ஜியோசயின்ஸில் வெளியாகியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, காலநிலை மாற்றத்தால் பசுமை சார்ந்து அண்டார்டிகாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை விவரிக்கிறது. மேலும் புவி வெப்பமடைவதால் பாதிக்கப்படும் அண்டார்டிகா பகுதியைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்த ஆய்வுக்கட்டுரை வலியுறுத்துகிறது.