இரு முறை ஒத்திவைக்கப்பட்ட சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்திற்கு மீண்டும் தேதி குறிப்பு!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் `ககன்யான்’ திட்டத்தை 2026-ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஆக்ஸிம் 4 குழுவினருடன் சுபான்ஷு சுக்லா
ஆக்ஸிம் 4 குழுவினருடன் சுபான்ஷு சுக்லாANI
1 min read

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் `ஆக்ஸிம் 4’ விண்வெளி பயணத் திட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, விண்வெளி பயணத்திற்கான புதிய தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 19 அன்று அதிகாரபூர்வமாக விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ள `ஆக்ஸிம் 4’ திட்டத்தின் வழியாக விண்வெளிக்குச் செல்லவுள்ள சுபான்ஷு சுக்லா, தனது இந்த முதல் விண்வெளி பயணத்தின் மூலம் வரலாறு படைக்கவுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, `ஆக்ஸிம் 4’ திட்டத்திற்காக ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படவுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் `ககன்யான்’ திட்டத்தை 2026-ல் செயல்படுத்தவும், இந்தியாவுக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தை 2035-ல் கட்டி முடிக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடாக நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து `ஆக்சியம் 4’ திட்டத்தின் கீழ் இந்திய வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப இஸ்ரோ முடிவுசெய்தது.

இதன்படி அமெரிக்கா, இந்தியா (விமானப்படை வீரர் சுபான்ஷு ஷுக்லா), போலந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு, ஜூன் 9-ல் விண்வெளி பயணத்தை தொடங்கவிருந்தது. ஆனால் ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு ஜூன் 11-ல் ஏவப்படவிருந்த நிலையில் மீண்டும் ஓத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், விண்வெளி பயண திட்டத்திற்கான தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்ஸிம் 4 திட்டம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட 7 ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொள்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in