இந்தியாவின் முதல் மறுபயன்பாடு (reusable) ஹைப்ரிட் வகையிலான ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 24) சென்னையில் இருந்து வானில் ஏவப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன், மார்ட்டின் குழுமத்துடன் இணைந்து `மிஷன் ரூமி 2024 திட்டத்தின் கீழ்’ மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் RHUMI 1 ராக்கெட்டை உருவாக்கியது. இந்த ராக்கெட்டில் வெடிமருந்துகள் உபயோகப்படுத்தப்படவில்லை. இதன் செயல்பாடுக்காக ஹைப்ரிட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் இருந்து, மொபைல் ராக்கெட் லாஞ்சரில் வைத்து இந்த RHUMI 1 ராக்கெட் வானில் ஏவப்பட்டது. இதில் 50 பிகோ செயற்கைக்கோள்களும், 3 கியூப் செயற்கைக்கோள்களும் சோதனை முறையில் அனுப்பப்பட்டுள்ளன.
`3.30 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை காலை 7 மணிக்கு வானில் ஏவத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் 7.25 மணி அளவில் வானில் ஏவப்பட்டது. 35 கி.மீ தொலைவு வரை ராக்கெட் வானில் பறந்துள்ளது. தற்போது இதைச் சேகரிக்க எங்கள் குழுவினர் சென்றுள்ளனர்’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஸ்பேஸ் ஸோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மஹாலிங்கம்.
மறுபயன்பாடு ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோள்களை ஏவலாம். சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களை வானில் உரிய இடத்தில் சேர்ப்பித்த பிறகு, ராக்கெட் தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டு கடலில் விழுந்துவிடும். பிறகு மீண்டும் அதை உபயோகிக்கலாம். இந்த மறுபயன்பாடு ராக்கெட்டால், புதிய ராக்கெட் தயாரிக்கும் செலவு மிச்சமாகும்.