
நாட்டிலேயே முதல்முறையாக சோதனை அடிப்படையில் ஓடும் ரயிலில் ஏடிஎம் இயந்திரத்தை இந்திய ரயில்வே நிறுவியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் இருந்து மன்மாட் வரை தினமும் பஞ்சவதி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நாட்டிலேயே முதல்முறையாக பஞ்சவதி விரைவு ரயிலில் சோதனை அடிப்படையில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவி இந்திய ரயில்வே பரிசோதனை மேற்கொண்டது.
பஞ்சவதி விரைவு ரயிலின் ஏசி பெட்டி ஒன்றில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏசி பெட்டியில் ஏடிஎம் வைக்கப்பட்டிருந்தாலும், ரயில் பெட்டிகளுக்கு இடையே இணைப்புகள் இருப்பதால், ரயிலின் 22 பெட்டிகளைச் சேர்ந்த பயணிகளும் ஏடிஎம் இயந்திரத்தை உபயோகிக்க முடிந்தது.
இந்த ரயில் பயணத்தின்போது, இகட்புரி மற்றும் கசாராவுக்கு இடைப்பட்ட பகுதியில் இணைய சேவை தடைபட்டதால் அங்கு மட்டும் ஏடிஎம் சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை தவிர்த்து, பயணத்தின் பெரும்பாலான நேரம் பரிசோதனை முயற்சி எதிர்பார்த்த முடிவை அளித்ததாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய ரயில்வே மண்டலத்தின் புசாவல் பிரிவுக்கும், மஹாராஷ்டிர வங்கிக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் இயந்திரத்தின் பாதுகாப்பிற்காக சிசிடிவி காமெராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதற்கு பொது மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற ரயில்களில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.