காசோலை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம், கேரள மாநிலம் கொல்லத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பூஷண் ராம்கிருஷ்ண கவாயால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் நீதிமன்றத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், இது கேரள நீதித்துறைக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்டார்.
இந்த டிஜிட்டல் நீதிமன்றம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது, வழக்கு தொடர விண்ணப்பம் அளிப்பது, விசாரணை மேற்கொள்வது, விசாரணையில் சம்மந்தப்பட்ட நபர்கள் ஆஜராவது, தீர்ப்பளிப்பது என இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இணைய வழியில் மட்டுமே நடைபெறும்.
கொல்லம் மாவட்டத்தில் நடைபெறும் காசோலை முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இந்த டிஜிட்டல் நீதிமன்றத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளைப் பொறுத்து, படிப்படியாக பிற மாவட்டங்களிலும் டிஜிட்டல் நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பரில் இருந்து இந்த டிஜிட்டல் நீதிமன்றம் முழுமையான செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த டிஜிட்டல் நீதிமன்றத்தின் செயல்பாட்டுக்கான ஒத்துழைப்பை இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.