
மத்திய அரசின் சமுத்ரயான் திட்டத்தின் மூலம் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இணையவுள்ளது இந்தியா.
கடந்த 2021-ல் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் ஆழ்கடல் தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆழ் கடலுக்கு மனிதர்களை அனுப்பி அதன் வளங்களை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் சமுத்ரயான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சமுத்ரயான் திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நீர்மூழ்கி வாகனமான மத்ஸ்யா-6000 உள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில், 3 விஞ்ஞானிகளை கடலுக்குள் சுமார் 6,000 கி.மீ ஆழம் வரை அனுப்பும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மத்ஸ்யா-6000 வாகனம்.
இந்தியாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட கடல்பகுதிகளான பிரத்தியேக பொருளாதார மண்டலத்திலும் (exclusive economic zone), கண்டப் படுகையிலும் (continental shelf) உள்ள கடல் வளங்கள் குறித்த ஆராய்ச்சியை மத்ஸ்யா-6000 வாகனத்தின் வழியாக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.
ஆழ்கடல் பகுதிகளில் இருக்கும் பாலிமெட்டாலிக் நாடியூல் (polymettalic nodule) என்று அழைக்கப்படும் அதிமுக்கியமான கணிம வளத்தில், இரும்பு, மாங்கனீஸ், நிக்கல், கோபால்ட், செம்பு உள்ளிட்ட பல தனிமங்கள் உள்ளன. அத்துடன் எரிவாயு வளங்களும் ஆழ்கடலில் உள்ளன. இந்த கடல் வளங்களை பாதுகாப்பான முறையில் எடுக்கும் பணிக்கான ஆராய்ச்சியிலும் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபடவுள்ளனர்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் முனைவர் எம். ரவிச்சந்திரன் இந்தியா டுடே செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், `தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாகவே கடலைப் பற்றிய தகவல்கள் மனித குலத்துக்குத் தெரியும். மீதமிருக்கும் 95 சதவீத கடல், மிக முக்கியமாக கடல் படுகை போன்றவை குறித்த தகவல்களுக்கு நிறைய ஆராய்ச்சியில் ஈடுபடுவது அவசியம். இதை செயல்படுத்த இந்தியாவுக்கு சமுத்ரயான் உதவும்’ என்றார்.