ஆகஸ்ட் 23-ல் முதல் தேசிய விண்வெளி தினம்

நிலவின் மேற்பரப்பில் பயணித்த பிரக்யான் ரோவர், புகைப்படங்கள் எடுத்து அவற்றை பூமியில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது
ஆகஸ்ட் 23-ல் முதல் தேசிய விண்வெளி தினம்
1 min read

வரும் 23 ஆகஸ்ட் 2024-ல் நாடு முழுவதும் முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடவுள்ளது மத்திய அரசு.

சந்திர கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் விக்ரம் லாண்டரை கடந்த வருடம் ஆகஸ்ட் 23-ல் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறக்கியது.

இந்த சாதனையின் மூலம் சந்திரனில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4-வது நாடு என்ற பெருமைப் பெற்றது இந்தியா. அது மட்டுமல்லாமல் சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் தரையிறக்கத்தை மேற்கொண்ட முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதைத் தொடர்ந்து, சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லாண்டர் தரையிறங்கிய இடத்துக்கு `சிவ-சக்தி புள்ளி’ எனப் பெயரிட்டது இஸ்ரோ.

சந்திரனில் இஸ்ரோ மேற்கொண்ட இந்த குறிப்பிடத்தக்க சாதனையைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23-ல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு. எனவே வரும் ஆகஸ்ட் 23-ல் முதல் தேசிய விண்வெளி தினத்தை இந்தியா கொண்டாடவுள்ளது.

சந்திரனில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லாண்டரில் இருந்து ஆகஸ்ட் 26-ல் பிரக்யான் ரோவர் வெளிப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் பயணித்த பிரக்யான் ரோவர், புகைப்படங்கள் எடுத்து அவற்றை பூமியில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது. அதன் பிறகு செப்டம்பர் 2-ல் தன் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது பிரக்யான்.

பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் பயணிக்கும் காணொளியையும், ரோவர் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டது. இது தொடர்பாக அப்போது இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், `இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் வரும் ஆண்டுகளில் மனித குலத்துக்கு பலவித நன்மைகளை அளிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in