ஹைட்ரஜனில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் பெட்டி: சோதனை முயற்சி வெற்றி! | Hydrogen Coach

ஆரம்பகாலத்தில் ஹைட்ரஜன் ரயில்களின் இயக்கச் செலவு அதிகமாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் அது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைட்ரஜனில் இயங்கிய ரயில் பெட்டி
ஹைட்ரஜனில் இயங்கிய ரயில் பெட்டிhttps://x.com/AshwiniVaishnaw
1 min read

இந்திய ரயில்வேவுக்குச் சொந்தமான ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஹைட்ரஜனில் இயங்கும் நாட்டின் முதல் ரயில் பெட்டி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

`பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்’ திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் 35 ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக கடந்த 2023-ல், ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்தார்.

ஒவ்வொரு ரயிலுக்கும் ரூ. 80 கோடி செலவாகும் என்றும், பாரம்பரிய மற்றும் மலைப்பாதைகளில் இதற்கான உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்காக ஒரு வழித்தடத்திற்கு ரூ. 70 கோடி செலவாகும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

`ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் பெட்டி (டிரைவிங் பவர் கார்) சென்னை ஐ.சி.எஃப்.பில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 1,200 ஹெச்பி ஹைட்ரஜன் ரயிலை இந்தியா உருவாக்கி வருகிறது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியலில் இது இந்தியாவை இடம்பெறச் செய்யும்’ என்றார்.

சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி, தூய்மையான மற்றும் நிலையான ரயில் அமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா எட்டிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தியாவின் பசுமை எரிசக்தி மற்றும் எதிர்காலத்திற்கான போக்குவரத்துத் தீர்வுகளை இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.

ஆரம்பகாலத்தில் ஹைட்ரஜன் ரயில்களின் இயக்கச் செலவு அதிகமாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் அது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை போக்குவரத்தை ஊக்குவிப்பதையும், சுத்தமான ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இந்தியாவின் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை ஆதரிப்பதையும், இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in