
இந்திய பாதுகாப்புப் படைகளின் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட திரள் டிரோன் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இது நடந்து சில நாட்களுக்குள்ளாகவே, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன்களுக்கு எதிரான தாக்குதல் அமைப்பான `பார்கவாஸ்திரவை’ வெற்றிகரமாக இந்தியா சோதித்துள்ளது.
ஒடிசாவின் கோபால்பூரில் அமைந்துள்ள கடலோர துப்பாக்கிச் சூடு தளத்தில், பார்கவாஸ்திரா அமைப்பின் குறு ராக்கெட்டுகள் நேற்று (மே 13) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இந்த சோதனை முயற்சியின்போது, குறிப்பிட்ட அனைத்து செயல்திறன் இலக்குகளையும் பார்கவாஸ்திரா பூர்த்தி செய்துள்ளது.
சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த பார்கவாஸ்திரா ராக்கெட் அமைப்பு, இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் சோதிக்கப்பட்டது.
5,000 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான பகுதிகள் உள்பட பல்வேறு நிலப்பரப்புகளில் பயன்படுத்தும் வகையில் பார்கவாஸ்திரா ராக்கெட் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் வானில் வரும் டிரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் மேம்பட்ட திறன் இந்த அமைப்பிடம் உள்ளது.
பார்கவாஸ்திரா தயாரிக்கப்பட்டதன் மூலம், திரள் டிரோன்களுக்கான எதிர் தாக்குதல் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளதாக, சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.