குரங்கு அம்மை நோய் பாதிப்பைக் கண்டறிய முதல்முறையாக இந்தியாவில் ஆர்.டி.பி.சி.ஆர் கிட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக் கருவிக்கான அங்கீகாரத்தை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் செயல்பட்டுவரும் சிமன்ஸ் ஹெல்த்தினீர்ஸ் நிறுவனம் இந்தப் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் கிட்டை உருவாக்கியுள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பைக் கண்டறிய தற்போது நடத்தப்படும் சோதனை நடைமுறையில், முடிவுகள் தெரிய 1-2 மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்தப் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் கிட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனைகளில், முடிவுகளை 40 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் நோய் பாதிப்புகள் குறித்து விரைவாகத் தெரிந்துகொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள முடியும். மேலும் இந்தப் புதிய சோதனைக் கருவியில் வெளிவரும் முடிவுகள் மிகத் துல்லியமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை என்று அழைக்கப்படும் மங்கி பாக்ஸ் நோயின் தீவிரமான பரவல் குறித்து, கடந்த ஆகஸ்ட் 14-ல் உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது உலக சுகாதார மையம். இந்நிலையில் குரங்கு அம்மை பரவல் குறித்த இரண்டாவது உலகளாவிய சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார மையம்.
குரங்கு அம்மை நோய்க்குக் காரணமான வைரஸின் மாறுபட்ட புதிய வகையான கிளாட் 1-ன் மூலம் தற்போது ஆப்ரிக்காவில் மிக வேகமாகப் பரவி வருகிறது குரங்கு அம்மை. இந்தப் புதிய மாறுபட்ட வைரஸ் வகையால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.