
அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக நிலவும் அரசின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தொழில்துறையை மேம்படுத்த முதலீடுகளை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் யுரேனியம் தனிமத்தை வெட்டி எடுக்கவும், இறக்குமதி செய்யவும், பதப்படுத்தவும் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுசக்தி உற்பத்தித் திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, அத்துடன் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு அனுமதிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, மத்திய அரசு திட்டமிட்டுள்ள மின் உற்பத்தி விரிவாக்க இலக்கு எட்டப்பட்டால், இந்தியாவின் மொத்த மின் தேவைகளில் 5% அணுசக்தி மூலம் பெறப்படும் என்று அரசாங்க மதிப்பீடுகள் தகவல் தெரிவிப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அணுசக்தி பொருள்களின் தவறான பயன்பாடு, கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக யுரேனியம் தனிமத்தை வெட்டி எடுத்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றின் மீது மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் இதுவரை அமலில் உள்ளன.
ஆனால் அணுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்தும் பணியை ஒட்டி யுரேனியத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையை சமாளிக்க, தனியார் இந்திய நிறுவனங்கள் யுரேனியத்தை வெட்டியெடுக்கவும், இறக்குமதி செய்யவும், பதப்படுத்தவும் வழிவகை செய்யும் திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்து வருவதாக அரசாங்க வட்டாரத்தைச் சேர்ந்த இருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் நடப்பு நிதியாண்டில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனியார் நிறுவனங்கள் யுரேனியத்தை வெட்டியெடுத்து பதப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.