
20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) பயன்பாட்டால் வாகனத்தின் செயல்திறனில் ஏற்படும் தாக்கம் குறித்த கவலைகள் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
குறிப்பாக, அத்தகைய கூற்றுகள் பெரும்பாலும் ஆதாரமற்றது என்றும் அறிவியல் சான்றுகள் அல்லது நிபுணரின் பகுப்பாய்வுகளால் அவை ஆதரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு, அது குறித்த விரிவான விளக்கத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
E20 எரிபொருள் பழைய வாகனங்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதா அல்லது வாகனத்தை இயக்கும் நபர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா என்று கேள்வி எழுப்பி அண்மையில் வெளியான செய்திகளுக்கு எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், மத்திய அமைச்சகம் பதிலளித்துள்ளது.
குறிப்பாக, பல ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை மேற்கோள்காட்டியுள்ள அமைச்சகம், E20 எரிபொருள் பாதுகாப்பானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக நன்மை பயக்கும் என்று கூறியது.
E20 எரிபொருள் செலுத்தப்பட்ட வாகனங்களில் 1,00,000 கி.மீ.க்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால சோதனையில், E20 மற்றும் வழக்கமான பெட்ரோலுக்கு இடையேயான எரிபொருள் செயல்திறனில், `குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை’ என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மேலும், இந்த சோதனைகள் ஒவ்வொரு 10,000 கி.மீ.க்கும் மேற்கொள்ளப்பட்டு, எஞ்சின் செயல்திறன் மட்டுமல்லாமல், உமிழ்வு மற்றும் அதன் ஆயுள் போன்றவையும் மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ஆகியவை மேற்கொண்ட மதிப்பீடுகளில், E20 எரிபொருளால் பழைய வாகனங்கள்கூட அசாதாரண தேய்மானத்தால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
வாகன எஞ்சின் சேதத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல், சூடான மற்றும் குளிர்ந்த எஞ்சின் தொடக்க சோதனைகளிலும் E20 எரிபொருள் தேர்ச்சி பெற்றது.
எரிபொருள் செயல்திறனில் சிறிய வீழ்ச்சி
அதேநேரம், எத்தனால் கலந்த பெட்ரோலை முன்வைத்து அடிக்கடி எழுப்பப்படும் கவலைகளில் ஒன்று வாகனத்தின் குறைக்கப்பட்ட மைலேஜ் ஆகும்.
எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது பெட்ரோலைவிட குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தில் சிறிய வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை மத்திய அமைச்சகம் ஒப்புக்கொண்டது.