கூகுளின் சர்வதேச செயற்கை நுண்ணறிவு முனையம்: ஆந்திராவில் விரைவில் தொடக்கம் | Google |

இந்திய அளவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக அமையும் திட்டம்...
கூகுளின் சர்வதேச செயற்கை நுண்ணறிவு முனையம்: ஆந்திராவில் விரைவில் தொடக்கம் | Google |
1 min read

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ. 1.33 லட்சம் கோடி செலவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு முனையம் உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் கூகுள் ஏற்பாடு செய்த பாரத் ஏஐ சக்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பேசிய கூகுள் கிளவுடின் நிர்வாக இயக்குநர் தாமஸ் குரியன் கூறியதாவது:-

“விசாகப்பட்டினத்தில் சர்வதேச அளவிலான கூகுளின் செயற்கை நுண்ணறிவு முனையம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படும். கிகாவாட் அளவிலான தரவு முனையம், பல்வேறு துறைகளின் செயற்கை நுண்ணறிவு தேவைகளைப் பூர்த்தி செய்யும். அமெரிக்காவுக்கு வெளியில் கூகுள் அதிக செலவில் முதலீடு செய்யும் முதல் திட்டமான இது, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மீதான கூகுளின் நீண்ட கால அர்ப்பணிப்பாகத் திகழ்கிறது” என்றார்.

அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படவுள்ள கூகுள் செயற்கை நுண்ணறிவு தரவு முனையம், இந்திய அளவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாகும். “வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை மையமாகக் கொண்டு கூகுளின் அதிகபட்ச முதலீடாக இத்திட்டம் அமைந்துள்ளது. இதன்மூலம் விசாகப்பட்டினத்தை செயற்கை நுண்ணறிவு நகரமாக மாற்றும் ஆந்திராவின் திட்டப்படி 1.8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அமைக்கப்படும்” என்று இதுகுறித்த கூகுளின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூகுளின் மிகப்பெரிய முதலீடு குறித்து பிரதமர் மோடியுடன் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை தொலைப்பேசியில் கலந்துரையாடினார். இதைப்பற்றி அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள கூகுளின் முதல் செயற்கை நுண்னறிவு மையம் குறித்து பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசியது பெருமைக்குரிய நிகழ்வு ஆகும். கிகாவாட் அளவுள்ள கணினி மையங்களைக் கொண்டு சர்வதேச தரத்தில், பெரிய அளவிலான ஆற்றலை உருவாக்கும் கட்டமைப்பாக இந்த முனையம் செயல்படவுள்ளது. இதன் மூலம் முன்னணி தொழில்நுட்பம் இந்திய நிறுவனங்களுக்கும் பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவின் புதுமைகளை வேகப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சி முன்னெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in