
உலகிலேயே முதல் முறையாக 0.5 மைக்ரான் அளவில் நுண்ணிய முறையில் துல்லியமாக மனித மூளையை வெட்டி ஆராய்ச்சி செய்துள்ளதாக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று (டிச.11) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் காமகோடி பேசியவை பின்வருமாறு,
`மனித மூளையை புரிந்துகொண்டவர் இங்கே யாருமில்லை. ஒரு குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே மூளை வளர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலையிலும் மூளையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பிறவியிலேயே பெருமூளை வாதம் போன்ற மூளை பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன.
மூளை வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது, எதனால் மூளையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன, அல்சைமர், பார்க்கின்சன் போன்ற நோய்கள் மூளையின் எந்தப் பகுதியை பாதிக்கின்றன போன்றவை குறித்த கேள்விகளுக்கான புரிதல் நம்மிடம் குறைவாகவே இருக்கிறது. எனவே மூளையின் கட்டமைப்பு குறித்தும், அதற்குள் அமைந்திருக்கும் உள் இணைப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தோம்.
இதற்காக, 14 முதல் 24 வாரங்கள் வளர்ச்சியைக் கொண்ட 5 மனித மூளைகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டோம். ஆராய்ச்சியின் முதற்கட்டமாக அந்த மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் நுண்ணிய முறையில் துல்லியமாக வெட்டி, நுண்ணோக்கி வழியாக ஆய்வு செய்தோம். இந்த வகையில் ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்ட ஆராய்ச்சி, உலகிலேயே முதல் முறையாகும்.
இப்படிப்பட்ட ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட தரவுகள் உலகில் வேறு எங்குமே இல்லை. இந்த தரவுகளை இன்று நாங்கள் வெளியிட இருக்கிறோம். இந்தத் திட்டத்திற்கு தாரிணி எனப் பெயரிட்டுள்ளோம். கோவிட் பெருந்தொற்று சமயத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 90 முதல் 95 சதவீதத்திலான உபகரணங்களை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டோம்' என்றார்.