மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்த வருடத்தின் இறுதிக்குள் செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பேட்டியளித்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.
கடந்த செப்.18-ல் இஸ்ரோவின் சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, நிலவில் தரையிறங்கும் விண்கலம் அங்கு சேகரிக்கப்படும் மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பும்படியான வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக இன்று (செப்.20) பெங்களூருவில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், `மத்திய அமைச்சரவை சந்திரயான்-4 திட்டத்துக்கு ஒப்புதலை அளித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இதற்கான அறிவிப்புகளை ஒவ்வொன்றாக எதிர்பார்க்கலாம். நிலவுக்குச் சென்று தரையிறங்குவதற்காக மட்டுமே சந்திரயான்-3 வடிவமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது (சந்திரயான்-4) நிலவில் இருந்து திரும்பி வரவிருப்பதால் விண்கலத்தின் அளவு மேலும் இருமடங்காகும். இதை விண்ணில் ஏவுவதற்கான திறன் தற்போது நம்மிடம் கிடையாது. இரு மடங்கு கூடுதலான திறனுடன் மட்டுமே இதை விண்ணில் ஏவ முடியும். எனவே இது மிகவும் சிக்கலானது’ என்றார்.
தொடர்ந்து பேசிய சோமநாத், `விண்ணில் ஏவப்பட ககன்யான் தயாராக உள்ளது. இந்த வருடத்துக்குள் அதை ஏவ நாங்கள் அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம் 2018-ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
மேலும் கடந்த செப்.18-ல் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதை 2035-க்குள் முழுமையாக நிறுவ இஸ்ரோ இலக்கு நிர்ணயத்துள்ளது.