
டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் வயாகாம்18 நிறுவனங்களின் இணைப்பு ஊடக உலகில் மிகப் பெரிய அளவில் பேசுபொருளை உண்டாக்கியது. இரு நிறுவனங்களின் இணைப்பு தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். நவம்பரில் இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு ஊடக உலகில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
நிறுவனங்கள் இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுமா அல்லது தனித்தனியாக செயல்படுமா என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
இதனிடையே, தில்லியைச் சேர்ந்த ஆப்-டெவலப்பர் ஒருவர் முன்கூட்டியே திட்டமிட்டு ஜியோஹாட்ஸ்டார்.காம் என்ற டொமைனை வாங்கியுள்ளார். வாங்கியது மட்டுமில்லாமல் இந்த டொமைனை எதற்காகவும் பயன்படுத்தாமல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வெளிப்படையாக கோரிக்கை வைப்பதற்காக அவர் இதைப் பயன்படுத்தியுள்ளார்.
ஜியோஹாட்ஸ்டார்.காம் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"தில்லியைச் சேர்ந்த ஆப்-டெவலப்பரான நான் என்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை இழந்தவுடன் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் பார்வையாளர்களை இழந்து வருவதாகச் செய்தியைப் பார்த்தேன். இதன் காரணமாக ஹாட்ஸ்டாரை வேறு நிறுவனத்திடம் விற்க டிஸ்னி பரிசீலனை செய்து வருவதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சோனி, ஜீ நிறுவனங்கள் இணைப்பு பற்றி ஏற்கெனவே அறிவிப்புகள் வந்ததால் வயாகாம் 18 நிறுவனத்தால் மட்டும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரை வாங்க முடியும் என்று தோன்றியது. சாவன் எனும் இசைச் செயலியை ஜியோ வாங்கியபோது, இதற்கு ஜியோசாவன் எனப் பெயரை மாற்றினார்கள். டொமைனையும் சாவன்.காமிலிருந்து ஜியோஹாட்ஸ்டார்.காம் என மாற்றினார்கள்.
எனவே, ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கினாலும் ஜியோஹாட்ஸ்டார் என்றுதான் பெயரிடுவார்கள் எனத் தோன்றியது. உடனடியாக ஜியோஹாட்ஸ்டார் என்று டொமைன் இருக்கிறதா எனப் பார்த்தேன், இருந்தது. மிகுந்த உற்சாகமடைந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உற்சாகத்துடன் இவர் ஜியோஹாட்ஸ்டார்.காம் எனும் டொமைனை வாங்கியுள்ளார். இதன் நோக்கத்தையும் இதே தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு திட்டத்தில் பணியாற்றுவதற்காக தான் தேர்வாகியுள்ளதாகவும் தொழில்முனைவு குறித்து படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தன்னுடையக் கனவாகக் குறிப்பிட்டுள்ள அவர், கனவை நிறைவேற்றுவதற்காகத் தன்னிடம் போதிய பணமில்லை என்று தெரிவிக்கிறார்.
எனவே, இந்த டொமைனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்க, தான் தயாராக இருப்பதாகவும் இதன் மூலம் கிடைக்கும் தொகையைக்கொண்டு கனவை நனவாக்கக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிலையன்ஸ் போன்ற நிறுவனத்துக்கு இந்தத் தொகை மிகச் சிறியது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். எவ்வளவு தொகை என்பதை இந்தப் பதிவில் அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
இவருடைய இந்தச் செயல்பாடும் வெளிப்படையான கடிதமும் இணைய உலகின் கவனத்தை ஈர்த்தது. ஜியோ - ஹாட்ஸ்டார் இணைப்புக்குப் பிறகு ஜியோஹாட்ஸ்டார் என்று பெயர் சூட்டினால், நிச்சயம் ஜியோஹாட்ஸ்டார்.காம் என்ற டொமைன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத் தேவை. ரிலையன்ஸ் நிறுவனம் இந்த விவகாரத்தில் எப்படி செயல்படப்போகிறது என்பது கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாக இதே தளத்தில் மற்றொரு பதிவையும் அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
"ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து அம்புஜேஷ் என்ற அதிகாரி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். தன்னுடையக் கல்விச் செலவுக்காக ஐரோப்பிய டாலர் 93,345 (ரூ. 1.75 கோடி) வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளது. அவர்கள் என்னுடையக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்.
இதுமாதிரியான ஒரு பெரிய குழுமம் உதவி செய்யலாம்.
அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. ரிலையன்ஸுக்கு எதிராகச் சண்டையிட எனக்கு சக்தி இல்லை.
2023-ல் இந்த டொமைனை நான் வாங்கியபோது, ஜியோஹாட்ஸ்டார் என்ற ஒன்று இல்லவே இல்லை. நான் வாங்கியபோது ஜியோஹாட்ஸ்டார் என்ற டிரேட்மார்க் யாரிடமும் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் இந்த தளத்தை இயக்குவதற்கான அனுமதியை நான் தாமாகவே இழக்க நேரிடலாம். சட்டரீதியாக யாரேனும் உதவினால், நன்றியுடன் இருப்பேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.