மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பதற்கேற்ப, இவ்வுலகம் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் யுகத்துக்கு அடித்தளமாக இருந்தது கணினியின் கண்டுபிடிப்பு. கணினி மற்றும் இணையம் ஏற்படுத்திய புரட்சியில் தான் இன்றைய உலகம் சுழன்றுக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் யுகத்தின் அடுத்த புரட்சி என செயற்கை நுண்ணறிவைச் (ஏஐ) சொல்லலாம். ஏஐ தொழில்நுட்பத்தை டிஜிட்டல் வடிவிலுள்ள ஒரு சக மனிதன் என்று குறிப்பிடலாம். இந்தத் தொழில்நுட்பத்திடம் நீங்கள் கேள்விகளைக் கேட்டு உரையாடலைத் தொடங்கலாம். உங்களுடையக் கேள்விகளுக்கு ஏற்ப, இந்தத் தொழில்நுட்பம் பதிலளிக்கும்.
செயற்கை நுண்ணறிவு எளிய அறிமுகம்
அனைவருக்கும் இணையத்திலுள்ள தேடுபொறி (கூகுள், பிங், யாஹூ என பல தேடுபொறிகள் உள்ளன) பழக்கமானது. தேடுபொறியில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு ஏதேனும் தரவுகள், விவரங்கள் தேவையெனும்போது அதை தேடுபொறியில் தேடுகிறோம். தேடுபொறி தளம் அது சார்ந்து இணையத்தில் ஏற்கெனவே கொட்டிக் கிடக்கும் தகவல்களை, இணைப்புகளாக நம் கண்முன் கொண்டு வந்து சேர்க்கின்றன.
இதற்கு அடுத்தக்கட்டம்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டிடம் எண்ணிலடங்காத அளவுக்கு ஏராளமானத் தரவுகள் செலுத்தப்பட்டிருக்கும். தேடுபொறி தளத்தில் கேட்பதைப்போல செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் நாம் கேள்வி கேட்கும்பட்சத்தில், கேள்விகளுக்கு ஏற்ப இணைப்புகளைத் தராமல் ஒரு பதிலையே உருவாக்கிக் கொடுத்துவிடும்.
உதாரணத்துக்கு, ஏதேனும் உண்மைச் சம்பவங்கள் பற்றி தேடுபொறியிடம் கேட்டால், அந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகள், கட்டுரைகள் போன்ற தகவல்களை இணைப்புகளாகக் கொண்டு வந்து சேர்க்கும். இதுவே செயற்கை நுண்ணறிவு தளத்திடம் கேட்டால், இதுபோன்ற செய்திகள், கட்டுரைகள் உள்ளிட்டவை மூலம் அதன் வசம் உள்ள தரவுகளைக் கொண்டு, நாம் கேட்கும் சம்பவத்தைக் குறித்து விளக்கமாகக் கொடுத்துவிடும்.
தேடுபொறி தளத்திடம் ஒரு கடிதத்தை எப்படி எழுத வேண்டும் என்று கேட்டால், அதற்கான வழிமுறைகளைக் கொடுக்கும். செயற்கை நுண்ணறிவுத் தளம் வழிமுறைகளையும் கொடுக்கும், நாம் கேட்டால் கடிதத்தை எழுதியும் கொடுக்கும். கதை எப்படி எழுத வேண்டும் எனக் கேட்டால், அதற்கான வழிமுறைகளைத் தேடுபொறி வழங்கும், செயற்கை நுண்ணறிவு தளங்கள் கதையை எழுதியே கொடுக்கும். இப்படி எல்லாத் துறைகளிலும் எதைக் கேட்டாலும் செய்து முடிக்கக்கூடிய வல்லமை படைத்தது செயற்கை நுண்ணறிவு.
இது மிகச் சாதாரண எளிமையான உதாரணம். ஆனால், செயற்கை நுண்ணறிவு தளம் இதுமாதிரி கற்பனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை நொடிப் பொழுதில் செய்து முடிக்கும். இதைச் செய்து முடிப்பதற்குக் காரணம், அதன் வசன் அந்தளவுக்கு எண்ணிலடங்காத தரவுகள் இருக்கும். அவற்றின் அடிப்படையில் பதிலைக் கொடுக்கிறது. மொத்தத்தில் ஒரு சக மனிதரிடம் உரையாடுவதைப்போல இதன் வசம் உரையாடி வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்களைக் கொடுக்கும் என்பதால், செலுத்தப்பட்டுள்ள தரவுகளின் உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழலாம். உதாரணத்துக்கு, ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குப் பல கோணங்கள் இருக்கலாம். எந்தக் கோணத்திலுள்ள தரவுகள் செலுத்தப்பட்டிருக்கிறதோ, அந்தக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டே அதுதொடர்புடைய பதிலைதான் செயற்கை நுண்ணறிவு கொடுக்கும். இது நடைமுறைக்கு மாறான ஒரு நிலைப்பாடு கொண்ட கோணத்தின் அடிப்படையில்கூட இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இது ஒரு சிக்கல்.
சாட்ஜிபிடி
செயற்கை நுண்ணறிவு விரிவாக நடைமுறையில் பிரபலமடைந்தது ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மூலம். அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவால் என்னவெல்லாம் சாத்தியமென்பதை உலகுக்குக் காட்டி வருகிறது. இது அறிமுகமானது முதல் ஏராளமானோர் அன்றாடம் தங்களுடையப் பல வேலைகளில் சாட்ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இதுதவிர மெடா, ஆல்ஃபபெட் என அடுத்தடுத்து ஏஐ சாட்பாட்கள் புழக்கத்துக்கு வந்தன.
டீப்சீக்
டீப்சீக் என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சாட்பாட். இதுவும் சாட்ஜிபிடியை போல இயங்கும் தன்மையுடையது. டீப்சீக் சீனாவில் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டீப்சீக்கை உருவாக்கியது யார்?
சீனாவைச் சேர்ந்தத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம் டீப்சீக். இதை நிறுவியவர் லியங் வென்ஃபெங். இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ஏஐ மாடல்தான் டீப்சீக். உலகளவில் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள ஏஐ மாடல்களுக்கு கடும் போட்டியளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜாம்பவான் நிறுவனங்களைப் போல் அல்லாமல் டீப்சீக் ஏஐ மாடல் மிகக் குறைவான கணினி சிப்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக, இதன் பின்னணியிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், அமெரிக்க நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பத்தை இவர்கள் வெறும் 6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார்கள்.
இதன்மூலம், ஏஐ மாடலை உருவாக்குவதற்கு பெரிய தொகை தேவைப்படும் என்கிற பிம்பம் உடைபட்டுள்ளது. இதுவே, அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு பெரு நிறுவனங்களுக்குப் பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஏஐ தொழில்நுட்பம் சீனாவை மையமானக் கொண்டதாக மாறுவதற்கான அடித்தளமாக இது அமையலாம். செயற்கை நுண்ணறிவுதான் எதிர்காலம் என்பதை உணர்ந்து, சீனா இதன் மீது கவனத்தைத் திருப்பியிருப்பதும் மற்ற நாடுகளுக்கான செய்தி.
ஏற்கெனவே, அமெரிக்க நிறுவனங்கள் சில பங்குச் சந்தையில் பெரும் சரிவைக் கண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொல்வதென்ன?
"சீன நிறுவனத்தைச் சேர்ந்த டீப்சீக் வருகை என்பது நம் தொழில் நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணி" என்று டிரம்ப் குறிப்பிடுகிறார். எனினும், இதிலுள்ள நேர்மறை அம்சங்கள் பற்றி கூறிய டிரம்ப், "பில்லியன் கணக்கில் செலவிடுவதற்குப் பதில் குறைவான செலவில் அதே தீர்வைக் காணலாம்" என்றார்.
டீப்சீக்கில் கண்ட குறை
சீனாவை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் சிலவற்றை வல்லுநர்கள் சிலர் டீப்சீக்கிடம் எழுப்பியுள்ளார்கள். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்குப் பதிலளிக்க டீப்சீக் மறுக்கிறது.
தியானென்மென் சதுக்கப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்பது சீன வரலாற்றில் ஒரு மோசமான துன்பியல் சம்பவம். இந்தப் போராட்டம் குறித்து நினைவுகூரப்படுவதை சீனா ஒருபோதும் விரும்பாது. சீன அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் டீப்சீக் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுப்பதாக, இதன்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விமர்சனங்கள் எழுந்தாலும் டீப்சீக் உருவாக்கியுள்ள தாக்கம் என்பது சாதாரணமானது அல்ல. வரும் நாள்களில் நிச்சயம் பல மாற்றங்களுக்கு இது வழிவகுக்கும் என்றே சொல்லலாம்.