இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு: காரணம் என்ன?

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் `ககன்யான்’ திட்டத்தை 2026-ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு: காரணம் என்ன?
ANI
1 min read

`ஆக்ஸிம் 4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவிருந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராக்கெட் எஞ்சின் கோளாறு காரணமாகவும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் `ககன்யான்’ திட்டத்தை 2026-ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக பூமிக்கு திரும்ப அழைத்து வரும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடாக, நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து `ஆக்சியம் 4’ திட்டத்தின் கீழ் இந்திய வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்படி அமெரிக்கா, இந்தியா (விமானப்படை வீரர் சுபான்ஷு ஷுக்லா), போலந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் கொண்ட குழு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து நேற்று (ஜூன் 9) விண்வெளி பயணத்தை தொடங்கவிருந்தது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோவின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டது.

இந்நிலையில், விண்ணில் ஏவுப்படுவதற்கு முந்தைய சோதனையில் பால்கன் 9 ராக்கெட் எஞ்சினில் திரவ ஆக்ஸிஜன் கசிவும், உந்துதல் கட்டுப்பாடு அமைப்பின் செயலிழப்பும் கண்டறியப்பட்டதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி நாளை (ஜூன் 11) மாலை 5.30 மணிக்கு ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும், 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு 12-ம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை ராக்கெட் சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in