
விண்வெளியில் பூமியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் 2024 YR4 விண்கல், பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தகவல் தெரிவித்துள்ளது.
`2024 YR4’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட விண்கல் கடந்தாண்டு டிசம்பர் 27 அன்று சிலி நாட்டில் உள்ள விண்வெளி கண்காணிப்பு நிலையத்தால் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து 2032-ம் ஆண்டு டிசம்பர் 22 அன்று அந்த விண்கல் பூமியில் மோதக்கூடும் என்று தகவல் வெளியிட்டது நாசா.
அத்துடன் 2024 YR4 விண்கல்லின் பயணத்தை, கலிஃபோர்னியா நாசா மையத்திலிருந்து விஞ்ஞானிகள் கண்காணித் தொடங்கினார்கள். முதலில் அந்த விண்கல் பூமியில் மோதுவதற்கு 2.6 சதவீதம் வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், இந்த வாய்ப்பு 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அப்போதும்கூட, விண்கல் அச்சுறுத்தல் குறித்து கவலைபடத் தேவையில்லை இன்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், விண்கல்லின் பயணம் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், விண்கல் பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், `விண்கல்லின் பாதை குறித்த நமது கணிப்புகளை மேம்படுத்தும் வகையில், நாசாவின் பூமி பாதுகாப்பு குழுக்கள் விண்கல்லின் பயணத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது நாசா.
தற்போது பூமியில் இருந்து விலகிச்சென்றுகொண்டிருக்கும் 2024 YR4 விண்கல் ஏப்ரல் மாதம் ரேடார் கண்காணிப்பில் இருந்து முழுவதுமாக மறையும் என்றும், 2028 வரை மீண்டும் அது தோன்றாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.