சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்து சாதனை படைத்துள்ளது.
ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி மருத்துவமனையாக அப்போலோவின் முக்கியத்துவத்தையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த சாதனை அமைந்திருக்கிறது.
ரோபோடிக் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் எம்.எம். யூசுப் தலைமையிலான குழு, கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்ட் சர்ஜரி (சிஏபிஜி), இதய வால்வு சிகிச்சை / மாற்று சிகிச்சை, சிக்கலான இதய நோய் சிகிச்சைகள் உள்ளிட்ட பெரிய அளவிலான சிகிச்சை நடைமுறைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
குறுகிய காலத்தில் குணம் அடைந்து நலம் பெறுதல், நோயாளிகளுக்குக் குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, ஸ்டெர்னோடோமி இல்லாததால் தொற்றுநோய்க்கான ஆபத்து இல்லாமை ஆகிய முக்கிய பலன்கள் இதில் நோயாளிகளுக்குக் கிடைக்கிறது. பல நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே நடக்கத் தொடங்குகின்றனர். 3 முதல் 4 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியும்.
பாரம்பரிய இதய அறுவை சிகிச்சையில், முழு அளவில் குணம் அடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப, 3 முதல் 6 மாதங்கள் தேவைப்படும். அத்துடன் இம்முறையை ஒப்பிடும்போது இந்த நவீன சிகிச்சை முறையில், பொதுவாக 2 முதல் 3 வாரங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பி, அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இந்நிலையில், 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்ததை கொண்டாடும் வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இன்று சிறப்பு விழா நடைபெற்றது. இதில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர்- தலைவர் பிரதாப் சி ரெட்டி, மருத்துவர் எம்.எம். யூசுப் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பிரதாப் பேசியதாவது
“அப்போலோ மருத்துவமனை, சுகாதார சேவைகளின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் இதய நோய் சிகிச்சையிலும் ஒரு மைல்கல்லாகும். இத்தகைய மேம்பட்ட நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம், குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறைகளை வழங்கி, எங்களிடம் வரும் நோயாளிகள் குணமடைந்து விரைவில் நலம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்வதோடு, அதையே எங்களது நோக்கமாகவும் கொண்டுள்ளோம்” என்றார்.