
தேஜஸ் போர் விமான தயாரிப்புப் பணியில் ஹெச்.ஏ.எல். சுணக்கம் காட்டியதற்கு விமானப்படைத் தளபதி அதிருப்தி தெரிவித்த நிலையில், அது தொடர்பாக ஆராய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவிற்கு தேவைப்படும் இலகுரக போர் விமானங்களை சொந்த முயற்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை கடந்த 1980-ல் செயல்படுத்தியது மத்திய அரசு. இதன் அடிப்படையில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், கடந்த 2001-ல் தேஜஸ் போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது.
அனைத்து காலநிலையிலும் இயங்கக்கூடிய அதிநவீன போர் விமானமாக தேஜஸ் உருவானது. இதைத் தொடர்ந்து, தேஜஸ் போர் விமானங்களை வாங்க, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2010-ல் இந்திய விமானப்படை கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் கடந்த 2015-ல் இந்திய விமானப்படைப் பணியில் தேஜஸ் போர் விமானம் இணைந்தது. அதன்பிறகு தேஜஸ் போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட எம்.கே.1.ஏ. ரகத்தைச் சேர்ந்த 83 விமானங்களை கொள்முதல் செய்ய கடந்த 2021-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது இந்திய விமானப்படை. ஆனால் இன்று வரை அவை வழங்கப்படவில்லை
இந்நிலையில், அண்மையில் பெங்களூருவில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், `எங்களின் தேவைகள் மற்றும் கவலைகள் குறித்து மட்டுமே என்னால் கூறமுடியும். இந்த நேரத்தில், ஹெச்.ஏ.எல். மீது எனக்கு நம்பிக்கை இல்லை, இது மிகவும் தவறான விஷயமாகும்’ என்றார்.
தேஜஸ் போர் விமானங்களை குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல், ஹெச்.ஏ.எல். தாமதப்படுத்தியதே விமானப்படைத் தளபதியின் அதிருப்திக்குக் காரணமாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய பாதுகாப்பு செயலர் ராஜேஷ் குமார் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இலகுரக போர் விமானங்களை (தேஜஸ்) தயாரிப்பதில் தாமதம் ஏற்படுத்தும் காரணிகளை இந்த உயர் மட்டக் குழு ஆராய உள்ளது. தற்போது இந்திய விமானப்படை வசம் 36 தேஜஸ் போர் விமானங்கள் மட்டுமே உள்ளன.