மத்திய பட்ஜெட் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (ஆகஸ்ட் 11) பிரதமர் நரேந்திர மோடி அதிக மகசூலைத் தரும் 109 புதிய பயிர் ரகங்களின் விதைகளை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உரையாடினார் பிரதமர்.
இந்த நிகழ்வில் புதிய பயிர் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த பிரதமர் மோடி, வேளாண் துறையில் மதிப்புக் கூட்டலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். இந்தப் புதிய ரகங்கள் தங்களுக்கான செலவுகளைக் குறைக்கும் எனவும், இதனால் சுற்றுச்சூழல் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும் எனவும் பேசினார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயிகள்.
மேலும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய மோடி, ஊட்டச்சத்து மிகுந்த சத்தான உணவுகளை நோக்கி மக்கள் செல்வது குறித்தும் இந்த நிகழ்வில் அடிக்கோடிட்டுப் பேசினார். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் மீது பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறித்தும் அவர் பேசினார்.
`61 பயிர்களின், 109 வகையான புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமான விஞ்ஞானிகளுக்கு என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 109 புதிய ரக பயிர்கள் விவசாயிகளின் லாபத்தை உயர்த்தும், மக்களுக்கான ஊட்டச்சத்துக்காக உபயோகப்படும், ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிக்கும்’ என்றார் மத்திய வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்.
அதிகம் பயன்பாட்டில் இல்லாத பயிர் வகைகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் விஞ்ஞானிகள் இந்த புதிய ரகங்களை உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரகங்களை உருவாக்கத் தேர்தெடுக்கப்பட்ட 61 பயிர்களில், 27 தோட்டக்கலைப் பயிர்களாகும்.