விஜயகாந்த் உடல் நல்லடக்கம்: மண்ணில் கலந்த மண்ணின் மைந்தன்!

72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.படம்: https://twitter.com/mkstalin
1 min read

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

நுரையீரல் அழற்சி காரணமாக வியாழக்கிழமை காலை உயிரிழந்த விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இரு நாள்களாக அஞ்சலி செலுத்தி வந்தார்கள். மணப்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்தின் உயிர் பிரிந்த நிலையில், வியாழக்கிழமை காலை விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து தேமுதிக தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, விஜயகாந்தின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் தீவுத்திடல் மைதானத்தில் வைக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணியளவில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து தொடங்கியது. தலைமை அலுவலகம் வந்தடையும் வரை சாலைகளின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். வழிநெடுக விஜயகாந்தைப் போற்றி ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தார்கள்.

கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்தின் உடல் 6 மணியளவில் வந்தடைந்தது. இறுதிச் சடங்குகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. 50 கிலோ எடை கொண்ட சந்தனப் பேழையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்களுக்கென பெரிய திரை மூலம் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். உடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்கள். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இறுதிவரை இருந்தார்கள்.

விஜயகாந்தின் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் உறவினர்கள் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள்.

அனைத்துச் சடங்குகளும் முடிந்தபிறகு, இரவு 7 மணியளவில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in