
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளும், சொத்து ஆவணங்களும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இன்று (பிப்.14) ஒப்படைத்தது கர்நாடக அரசு.
1991-1996 காலகட்டத்தில் முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்து நகைகளும், புடவைகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களும், நில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.
கர்நாடக அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நகைகளை ஏலம் விட வேண்டும் என்று கடந்தாண்டு சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த குடிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகன், கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவிற்குச் சொந்தமான பொருட்களை பிப்ரவரி 14, 15-ம் தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ. 5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், குடிமையியல் நீதிபதி வழங்கிய உத்தரவின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும், சொத்து ஆவணங்களையும், பிற பொருட்களையும் இரும்புப் பெட்டிகளில் வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இன்று (பிப்.14) கர்நாடக அரசு அதிகாரிகள் ஒப்படைத்தார்கள்.
இதற்கிடையே, அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் தீபா. அதன் மீது இன்று (பிப்.14) விசாரணை நடத்திய நீதிபதிகள் நாகரத்னா, சதீஷ் சந்திரா அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.