மீனாட்சிபுரமும், நந்தனாரும்: மக்களவையின் இரு தமிழக தலித் எம்.பி.க்களும்

1981-ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் இருந்த 150-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் அங்கிருந்த தீண்டாமை காரணமாக இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள்
மீனாட்சிபுரமும், நந்தனாரும்: மக்களவையின் இரு தமிழக தலித் எம்.பி.க்களும்
ANI
1 min read

18-வது மக்களவையில் புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்று, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 2-ல் நிறைவடைந்தது.

புதிய மக்களவையின் 543 எம்.பி.க்களில், 28 எம்.பி.க்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்த 28 பேரில் இருவர் மட்டுமே தலித்துகள். அந்த இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மக்களவையின் 28 முனைவர் பட்டம் வாங்கிய எம்.பி.க்கள் பட்டியலில் 5 முனைவர் பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளது உத்தரப் பிரதேசம். இதற்கு அடுத்து தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தொல். திருமாவளவன் (சிதம்பரம்), து. ரவிக்குமார் (விழுப்புரம்), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை) மற்றும் கணபதி ராஜ்குமார் (கோவை) என தமிழகத்தைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

முனைவர் பட்டம் வாங்கிய திருமாவளவனும், ரவிக்குமாரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1981-ல் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் நடந்த மதம் மாற்ற நிகழ்வு குறித்து `மீனாட்சிபுரம் தலித்துகளின் மதமாற்றம்’ என்ற பெயரில் ஆராய்ச்சி மேற்கொண்டு அது மூலம் முனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன்.

மீனாட்சிபுரம் கிராமத்தில் இருந்த 150-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் அங்கிருந்த தீண்டாமை காரணமாக இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அன்றைய எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை 4 ஆண்டுகள் கழித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதைக்கு விசாரணைக் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டாலும், அறிக்கையில் இருந்த பரிந்துரைகளை முன்வைத்து 2002-ல் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா.

திருநெல்வேலியின் பிற பகுதியில் இருக்கும் தலித்துகளை விட இஸ்லாமியத்தைத் தழுவிவ மீனாட்சிபுரம் தலித்துகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் கண்ட முன்னேற்றங்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார் திருமாவளவன்.

முனைவர் பட்டம் வாங்கிய மற்றொரு எம்.பி.யான து. ரவிக்குமார் 63 சைவ நாயன்மார்களில் ஒருவரான, 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தனார் குறித்து `மன்னர் நந்தனின் மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற பெயரில் ஆராய்ச்சி மேற்கொண்டு அதன் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.

`நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் தீண்டாமை என்ற ஒன்று இருக்கவில்லை. வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் தீண்டாமை சம்பவம் 11-ம் நூற்றாண்டில் நடந்துள்ளது. சில கல்வெட்டுகளில் நந்தனார் மன்னர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரலாறு குறித்து அறிந்து கொள்ள இலக்கியங்களை விட கல்வெட்டுக்களை நாம் பிரதானமான ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரவிக்குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in