பொங்கல் வரை தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம்: வானிலை ஆய்வு மையம்

கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 143 மி.மீ. மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
பொங்கல் வரை தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம்: வானிலை ஆய்வு மையம்
1 min read

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னும் நிறைவுபெறவில்லை எனவும், பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி பின்வருமாறு,

`2024-ம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 1179 மி.மீ. மழை பதிவானது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 389 மி.மீ. மழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் 589.9 மி.மீ. மழையும் பதிவாகியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 143 மி.மீ. மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது. இயல்பில் இருந்து விலகலைப் பார்க்கும்போது தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 18 சதவீதமும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 33 சதவீதமும், ஆண்டுக் கணக்கில் 28 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது.

அதேபோல, அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 25 சதவீதம் அதிகமாகவும், நவம்பர் மாதத்தில் இயல்பை விட 23 சதவீதம் குறைவாகவும், டிசம்பர் மாதத்தில் 164 சதவீதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 33 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கடந்தாண்டைவிட இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.

குறிப்பாக, ஃபெஞ்சல் புயலால் அதிகமாக மழை கிடைத்திருந்தாலும், டிச.11 முதல் டிச.14 வரையிலான காலக்கட்டத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பரவலாக (தமிழகத்தின்) பெரும்பாலான இடங்களில், அதி கனமழையும், மிக கனமழையும் பெய்துள்ளது.

மாவட்ட அளவில் பார்க்கும்போது, தென்மேற்கு பருவமழைக் காலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 265 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 16 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 23 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பாகவும் மழை பதிவாகியுள்ளது.

நடப்பாண்டில் 27 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 12 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் மொத்தம் 4 புயல்கள் உருவாகின, கடந்தாண்டில் இது 6 ஆக இருந்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னும் நிறைவுபெறவில்லை. பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது. அதற்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை விலகும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in