
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில், நேற்று (நவ.13) இளைஞர் ஒருவரால் கத்தி குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி, தான் நலமுடன் இருப்பதாக இன்று காலை பேட்டியளித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபடி இன்று (நவ.14) காலை பேசிய மருத்துவர் பாலாஜி,
`நலமாக இருக்கிறேன். இதயப் பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஈசிஜி பரிசோதனையில் இதயத்தில் உள்ள பேஸ்மேக்கர் சரிபார்க்கப்பட்டது. காயங்களுக்குத் தையல் போடப்பட்டுள்ளது. நிலையாக இருக்கிறேன்’ என்றார்.
மருத்துவர் பாலாஜியை சந்திக்கும் முன்பு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியவை பின்வருமாறு,
`மருத்துவர் பாலாஜியின் மனைவி, மகள் மற்றும் தாயார் அவருடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவருக்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள பேஸ்மேக்கரின் இயக்கம் நேற்று சரிபார்க்கப்பட்டது. மருத்துவர் பாலாஜியின் வேண்டுகோளுக்கு இணங்க, சில பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று மதியம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய தனியறைக்கு அவர் மாற்றப்பட உள்ளார்.
அந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் மீது அத்துமீறி நுழைதல், காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுதல், பணியில் இருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சியில் ஈடுபடுதல் போன்ற 7 சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நீதிமன்றத்தால் விக்னேஷுக்கு 15 நாட்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய புதிய சீர்த்திருத்தங்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் 19-ல் தலைமைச் செயலாளர் உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார்.
மருத்துவமனையின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளன’ என்றார்.
கத்தி குத்து சம்பவத்தை அடுத்து, இன்று காலை முதல் கிண்டி அரசு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.