
திருச்சி முக்கொம்பு பகுதியில் சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 3 காவலர்களை பணியில் இருந்து நீக்கி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 4 அக்டோபர் 2023 அன்று திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது ஆண் நண்பருடன் முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு வந்திருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த 4 பேர், தங்களை காவல்துறையினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, அருகில் இருந்து காரில் வைத்து அவர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பி, முக்கொம்பு சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அந்த காரில் ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர் சித்தார்த், ரோந்து வாகனக் காவலர் சங்கர் ராஜபாண்டியன் மற்றும் நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரித்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் நால்வரும் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அன்றைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த 4 பேரும் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அன்றைய திருச்சி சரக டிஐஜி பகலவன் சம்மந்தப்பட்ட நான்கு காவல்துறையினரையும் அப்போது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சித்தார்த் மற்றும் பிரசாத் ஆகியோரை பணியில் இருந்து நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளதாகவும், சிறையில் உள்ள காவலர் சங்கர ராஜபாண்டியன் மீதான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறியதாகவும் புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.