சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும் பொறுப்பில் தவெக களத்தில் நிற்கும்: விஜய்

இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை.
சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும் பொறுப்பில் தவெக களத்தில் நிற்கும்: விஜய்
2 min read

சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும், அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விஜய் இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`மத்திய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டம், இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பு உரிமையை பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தவெக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, `வக்ஃபு என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது; மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது’ என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக சட்டத்தை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இது, வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். குறிப்பாக, தவெக சார்பில் வாதாடிய, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார்.

மேலும், இந்த திருத்தச் சட்டத்தால், அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமை சட்டங்களும் நேரடியாக கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக்காட்டினார். எனவே, இந்த இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் பதிலுக்கான பதிலுரையை தவெக தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான விசாரணை, நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்த சட்டத்தின் அபாயத்தை சுட்டிக் காட்டியுள்ளோம்.

வக்ஃபு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போது புதிய வக்ஃபு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாகிவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா?

வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?

சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரள இடது முன்னணி அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மாநில அரசுகளுக்கான உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அதுபோல, உச்சநீதிமன்றத்தில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலானத் தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு வாதங்களை முன்னிறுத்தி, தனியானதொரு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டாமா? அதை ஏன் இன்னும் செய்யவில்லை?

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்கவேண்டும். இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை!

சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தவெக என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in