
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள அந்த சார் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன.8) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். இறுதியாக கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய பதிலுரை பின்வருமாறு,
`சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக் கூடிய பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம், அதை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது. இது குறித்துப் பல எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துகளைப் பேசியிருக்கிறீர்கள். இதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியின் மேல் தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக ஒரு உறுப்பினர் பேசியுள்ளார்.
யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பக்கம் நின்று அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தரக்கூடிய காரியத்தைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். குற்றம் நடந்தபிறகு, குற்றவாளியைக் காப்பாற்ற முடிவு செய்திருந்தால் அரசை நீங்கள் குறை கூறலாம்.
ஆனால் சில மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும், அரசைக் குறை கூறுவது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். கடந்த டிசம்பர் 24 அன்று மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, அடுத்த நாள் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இது சரியான நடவடிக்கை.
முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்குக் காரணம், மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம். அது தொடர்பாக அந்த அமைப்பும் கடிதம் எழுதியிருக்கிறது. பாதுகாப்பு இல்லை, கண்காணிப்புக் காமெராக்கள் இல்லை என பொத்தாம் பொதுவாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த வளாகத்தில் இருந்த கண்காணிப்புக் காமெராக்கள் உதவியுடன்தான் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
முதல் தகவல் அறிக்கையை முன்வைத்து யார் அந்த சார் என்று எதிர்கட்சிகள் கேட்கின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இந்தப் புகாரை தற்போது விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையில் வேறு யாராவது சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.